Thursday, September 24, 2009

3797-ல் உலகம் அழியும்!

1503-ல் இருந்து 1566 வரை வாழ்ந்தவர் மைக்கேல் தி நாஸ்ட்ரடாமஸ். வருங்காலத்தைக் கணிப்பதில் கில்லாடி. 1555-ம் வருடம் 'தி சென்சுரீஸ்' என்கிற புத்தகத்தை எழுதினார் நாஸ்ட்ரடாமஸ். பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் மற்றும் இத்தாலி மொழிகளில் நான்கு வரிக் கவிதைகளால் நிரம்பியிருக்கிறது அந்தப் புத்தகம். அவர் சொன்னது எல்லாம் அப்படியே பலிக்கிறது என்கிறது ஒரு தரப்பு. எல்லாம் உதார் என்று உறுமுகிறது இன்னொரு தரப்பு.



'கோரமான பசியுடன் விலங்குகள் நதிகளைக் கடந்து செல்லும். உலகத்தின் பெரும்பகுதி ஹிஸ்டருக்கு எதிராக இருக்கும். அந்த விளைவுகள் உலகையே ஓர் இரும்புக் கூண்டில் அடைக்கும். ஜெர்மனிக் குழந்தைகளுக்கு மட்டும் எதுவுமே புரியாது' என்று எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். இந்தக் கவிதை இரண்டாம் உலகப் போரையும், ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரையும் குறிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள். 1665-ம் வருட லண்டன் தீ விபத்து, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் மரணம், பிரெஞ்சுப் புரட்சி, சேலஞ்சர் விண்கல விபத்து, ட்வின் டவர் தாக்குதல் என நாஸ்ட்ரடாமஸின் கவிதைகளின் செய்திகள் உண்மையில் நிகழ்கின்றன என்று உலகம் எங்கும் நம்புபவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இருக்கும். சதாம் ஹூசேன், ஒசாமா, ஹிரோஷிமா-நாகஸாகி எனப் பல விஷயங்களைப்பற்றி கொஞ்சம் குழப்பமான வார்த்தைகளால் கவிதை வரைந்திருக் கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
1566-ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி. 'நாளைக்கு இந்த விஷயத்தைப் பார்த்துக்கொள்வோமே!' என்று நாஸ்ட்ரடாமஸிடம் சொன்னார் ஒருமதகுரு. 'நாளை காலை நான் உயிருடன் இருக்க மாட்டேன்!' என்றுபதில் சொல்லியிருக்கிறார் நாஸ்ட்ர டாமஸ். சொன்ன மாதிரியேமறு நாள் காலை நாஸ்ட்ரடாமஸ் உயிரோடு இல்லை.

தன் மரணத்தையே சரியாகக் கணித்தவர் என்பதால், இன்றும் அவரின் கவிதைகளை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.


கி.பி. 3797-ல் உலகம் அழியும் என்று எழுதிவைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். ரகசியம் உடையும் நேரமும் அதுதான்!

--கார்த்திகா குமாரி

- ஆனந்தவிகடன்

No comments: